அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் 2021-22ம் ஆண்டுக்கான அதிமுக வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக பொருளாளர் மட்டுமே வரவு செலவு கணக்கை தாக்கல் செய்வார். ஆனால், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு வராததால் வரவு செலவு கணக்கை அமைப்பு செயலாளர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
இந்த கூட்டத்தின்போது அதிமுகவில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்தார். மேலும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வரவு செலவு அறிக்கையில் ‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என குறிப்பிடப்பட்டு அந்த கோப்பில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து இடம்பெற்றிருந்தது.
அந்த கோப்புகள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேவேளை, ஒருங்கிணைப்பாளராக தான் நீடிப்பதாக தெரிவித்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கினார். மேலும் தனது பங்குக்கு புதிய பொறுப்பாளர்களையும் நியமித்தார். இதனால், அதிமுக இரு அணிகளாக பிரிந்தது.
இந்நிலையில், ‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி’ என குறிப்பிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அதிமுக வரவு-செலவு கணக்கை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக பிளவு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால தலைவர் என்று தெரிவிக்கப்பட்டு அவர் கையெழுத்துடன் தாக்கல் செய்த வரவு-செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இந்த வரவு-செலவு அறிக்கை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி ‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்’ என்பதை அங்கிகரீக்கும் வகையில் வரவு-செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட நிகழ்வு எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி கையெழுத்திட்ட வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நடவடிக்கை ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.