Skip to content

விவசாயிகள் பயன்பெற 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள்…. அரியலூரில் தொடக்கம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 04 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும் மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும். இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதன்தொடர்ச்சியாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 04 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்றையதினம் துவக்கி வைத்து பார்வையிட்டு மருத்துவ வாகனத்தில் உள்ள நவீன வசதிகள் குறித்து கேட்டறிந்து, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கிட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அந்த வகையில் கால்நடை வளர்போர் பயன் பெறும் விதமாக ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளில் சேவையாற்ற உள்ள சிகிச்சை ஊர்தி ஆண்டிமடம் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும், அரியலூர் ஒன்றிய பகுதிகளில் சேவையாற்ற உள்ள சிகிச்சை ஊர்தி அரியலூர் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டும், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி செந்துறை கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும், திருமானூர் ஒன்றியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊர்தி திருமானூர் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டும் செயல்பட உள்ளது.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளவும், பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளவும்

உள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும்.

ஒரு இலட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கினை கொண்டு கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அரியலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை அனைத்து கால்நடை வளர்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறவேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.எம்.ஹமீது அலி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு.ரமேஷ், மரு.முருகேசன், கால்நடை மருத்துவர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!