டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமீப காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இரவிலும் நீடித்த மழை விடிய விடிய பெய்தது. இதனால் டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி மற்றும் அதை ஒட்டியுள்ள அரியானா மாநிலம் குருகிராம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு டெல்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததால் எக்கு பாலத்தின் மீது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் யமுனை ஆற்றில் நீர்மட்டம் 206.5 மீட்டரை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் டெல்லியில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரியானா தலைநகர் சண்டிகர் பகுதியிலும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. யமுனை பஜார் பகுதியில் யமுனை ஆற்றின் கரைகள் உடைந்ததால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க அரசு தயார் நிலையில் இருப்பதாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் குருகிராமில் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சுமார் 20 கி.மீ தூரம் வரை அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.