திண்டுக்கல் மாவட்ட வத்தலகுண்டுவை சேர்ந்த எஸ்.முகமது ஜூனத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு.. கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி போத்துப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்ஹா ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டியுள்ளனர். கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் பங்களா கட்டுவதற்கு தமிழ்நாடு கட்டிட அனுமதி விதிகளின் படி முறையாக அனுமதி பெற வேண்டும். மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க கட்டிட விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் இருவரும் ஆகியோர் பங்களா கட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் இருவரும் பிரபலமான நடிகர்கள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். விதிமீறல் கட்டிடங்களால் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும். அனுமதி பெறாமல் ஜெசிபி, பொக்லைன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்துள்ளனர். எனவே உரிய அனுமதி பெறாமல் நவீன பங்களா கட்டிய 2 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடுகையில், நடிகர் பாபி சிம்ஹா தனது தாயார் பெயரில் 2400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு 4000 சதுர அடி கட்டியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. தற்போது இரு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கலாம். மனு தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் , நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜன.2-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.