ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிறுத்திவிட்டன. இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதமும் கூடுதல் வரியும் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. , “இந்திய, ரஷ்ய கூட்டு நிறுவனமான நயாரா, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குஜராத்தின் வாடினார் நகரில் செயல்படுகிறது. ரஷ்யாவில் இருந்து சரக்கு கப்பல்களில் வரும் கச்சா எண்ணெய் இந்த நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. இங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வரும் 100 சரக்கு கப்பல்கள் மற்றும் நயாரா நிறுவனத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபர்டிரம்பும் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவதுடன் மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கிய எரிபொருள்களில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்துக்கு விற்கிறது. ரஷ்யாவின் போர் ஆயுங்களால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று அமெரிக்க அதிபர்டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரித்திருந்தார்.
ஐரோப்பா – ரஷ்யா வர்த்தகத்தில் எரிசக்தி மட்டுமல்ல, உரங்கள், சுரங்கப் பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களும் அடங்கும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாஃப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது.
இந்த விவகாரத்தில், இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது. எந்தவொரு பெரிய நாடுகளின் பொருளாதாரத்தையும் போலவே, இந்தியாவும் தனது நாட்டின் நலன்களையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.