உலகத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் முழக்கம்” என்ற ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம், அக்டோபர் 22 முதல் 27 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (அக்டோபர் 22) அன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ் சங்க இயக்குனர் பர்வீன் சுல்தானா எம்எல்ஏ தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்தப் பயிலரங்கம், பேச்சுத் திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு உதவும். அமைச்சர் மகேஷ், “தமிழ் முழக்கம், இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்” என்று தொடக்க உரையில் கூறினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுத வீடியோ காட்சிகளுக்கு எதிர்மறையாக பல விமர்சனங்கள் எழுந்தது. பலரும் அந்த வீடியோவை ட்ரோல் செய்து வந்தனர்.
இதனையடுத்து, இதற்குப் பதிலடியாக, பயிலரங்கத்தில் அமைச்சர் மகேஷ், “அழுகையை விமர்சித்தவர்களுக்கு என் பதில்” என்று தொடங்கி பேசினார். திருவள்ளுவரின் கவிதையை மேற்கோள் காட்டி, “உணர்ச்சி, அறிவு ஆகியவை சமமாக ஒன்றாக சேர்ந்து பேச்சு அமைய வேண்டும். உணர்ச்சி அதிகமாகி அறிவு குன்றினால் விலங்குக்கு சமம், அறிவு அதிகமாகி உணர்ச்சி குன்றினால் மரத்துக்கு சமம்” என்று விளக்கினார்.
இது குறித்து பேசிய அவர் “முதலில் நாம் மனிதர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு கற்படியை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்கு, தன்னை மனிதனாக மாற்றத் தெரியவில்லை என்பதுதான் என் கருத்து” என்று கூறினார். கரூர் சம்பவத்தில் அழுதது மனித உணர்வு என்று வலியுறுத்தி, “அழுகை என்பது பலவீனம் அல்ல, மனிதத்தன்மை” என்று தெரிவித்தார். தவெக உள்ளிட்டோரின் விமர்சனங்களை மறுத்து, “அரசியல் விமர்சனம் செய்வதற்கு உணர்ச்சியை கருவியாக்க வேண்டாம்” என்று அவர் அறிவுறுத்தினார்.