Skip to content

இன்று சந்திர கிரகணம்: தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடு

இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் வானில் இன்று மாலை தோன்றும் நிலையில் அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அன்னபூரணி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி விபரம்;
சந்திர கிரகணத்தின்போது, வானில் அதிசய நிகழ்வாக நீல விளிம்புடன் சிவப்பு சந்திரனை பார்க்கலாம். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகணமானது கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு சந்திர கிரகணமாக தென்படும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று மாலை 6.30 மணி முதல் 6.47 மணி வரை நிறைவடையும் நேரத்தில், பகுதி சந்திரகிரகணம் தென்படும். அதன்பின் லூனார் எக்ளிப்ஸ் தென்பட்டு சந்திரனின் ஒளிப் பொழிவு குறைந்து, 8 மணிக்குப் பின் மீண்டும் சந்திரன் முழு பிரகாசத்துடன் தென்படும். இதனை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் இயங்கும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் 3 சிறப்பு தொலை நோக்கிகள் வைத்து காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு வரக்கூடிய பார்வையாளர்களுக்கு, நுழைவு கட்டணம் இல்லை. மேலும் சந்திர கிரகணம் இயற்கையாகவே நிகழக்கூடியது. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அன்றாட வழக்கமான பணிகளை அவர்கள் தொடரலாம். அதே போல வெறும் கண்களால் பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!