புயலுக்கு பின்னர் சென்னையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது……மிகப்பெரிய மாண்டஸ் புயல் தாக்குதலிலிருந்து தமிழகம் அதிலும் குறிப்பாக சென்னை முழுமையாக மீண்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, செயல்பாடுகள் காரணமாக மக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். பெரிய அளவில் சேதம் இல்லை. மரங்கள் விழுந்தது உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. இந்த பணியை மாநகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர். இரவு பகலென்று பாராமல் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்கள். தற்போது சென்னையில் 25 ஆயிரம் பணியாளர்கள் சீர் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். 201 நிவாரண முகாம்களில் 3163 குடும்பங்களை சார்ந்த 9130 நபர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த புயலில் இதுவரை 4 உயிரிழப்பு, 98 கால்நடை இறப்பு, 181 வீடு, குடிசைகள் சேதமடைந்திருக்கிறது. பலத்த காற்று காரணமாக மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து உள்ளன. 600 இடங்களில் மின் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் 300 இடங்களில் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் இன்று மாலைக்குள் சீர் செய்யப்பட்டு விடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொிவித்து உள்ளார். முன்கூட்டியே திட்டமிட்ட காரணத்தால் எந்த பேரிடரையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த அரசு நிரூபித்து காட்டியிருக்கிறது. பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி கேட்கப்படும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு கணக்கெடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. புயல் பாதிப்பினால் எவ்வளவு தொகை நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்ற கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது.