மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர் தலைமையில் பா.ஜ., ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் இண்டியா கூட்டணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
லோக்சபா தேர்தலில், இக்கூட்டணி மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் இத்தேர்தலில் சங்கிலி தொகுதியில் உத்தவ் தாக்கரே வேட்பாளர் போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷால் படேல் தனித்து களமிறங்கி வெற்றி பெற்றார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
சமீபத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன்பே ‘மஹா விகாஸ் அகாடி’ சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதனை காங்கிரஸ் மற்றும் சரத்பவார் ஏற்றுக் கொள்ளவில்லை. சரத்பவார் கூறும்போது, தேர்தலுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். எந்த கட்சி வெற்றி பெறும் தொகுதிகளை பொறுத்தே முதல்வர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றார். இதுவும் தாக்கரே தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் இதனை சமாளிக்கும் விதமாக, முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கூட்டணியில் எந்த மோதலும் இல்லை என உத்தவ் மகன் ஆதித்யா தாக்கரே கூறினார். இந்நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிரா வந்துள்ளார். சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் என பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் தேசியவாத காங்கிரசின் சரத்பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், உத்தவ் தாக்கரே எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவரது கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கவில்லை. இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.