மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை (டிச.9), சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்டஸ் புயல் மற்றும் அதிகனமழை எச்சரிக்கையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் , விழுப்புரம் , கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.