Skip to content
Home » மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூரில்..பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

  • by Senthil

மணிப்பூர் மாநிலத்தில வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் இந்த மாவட்டம் உள்ளது. மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதுதொடர்பான தாக்குதலாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த சம்பவத்துக்கு ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதல்வர்  பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை மந்திரி ஸ்மிரிதி ராணி தன்னிடம் பேசியதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்  என உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ”குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த எந்தவொரு முயற்சியும் கைவிடப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூரம் குறித்து தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் நல்ல குணங்களை வெறுப்பும் விஷத்தனமும் வேரோடு பிடுங்குகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் குணத்தை கொண்ட சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும். மணிப்பூரில் நிகழும் கொடூர வன்முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

”மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது” என தனது ஆதங்கத்தை பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில்  பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்னையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  அதைத்தொடர்ந்து  மணிப்பூர் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை  இன்று அதிகாலை 1.30 மணிக்கு கைது செய்து விட்டோம் என அந்த மாநில முதல்வர் அறிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!