அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றதால், ரசிகர்கள் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். இதனால் மைதானத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள், மெஸ்ஸி விரைவாகக் கிளம்பியதால் கோபமடைந்து தண்ணீர் பாட்டில்கள், இருக்கைகள் உள்ளிட்ட பொருட்களை வீசியெறிந்தனர். சிலர் மைதானத்திற்குள் புகுந்து மேடை, ஏற்பாடுகளை அடித்து நொறுக்கினர். ரசிகர்களின் இந்த ரகளை போராட்டம் மைதானத்தை சூறையாடியது. போலீசார் உடனடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் சில ரசிகர்கள் காயமடைந்ததாக தகவல்கள் உள்ளன. மைதானத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து வெளியேற்றினர். இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மெஸ்ஸி இந்தியாவில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கொல்கத்தாவில் அவரது சிலை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இருந்தன. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நேரம் செலவிடாமல் சென்றது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.இந்த சம்பவம் மெஸ்ஸியின் இந்திய ரசிகர்களின் ஆர்வத்தையும், அதே நேரம் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. மெஸ்ஸியின் அடுத்த நிகழ்ச்சிகள் அமைதியாக நடைபெற போலீசார் கூடுதல் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

