டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மெட்ரோ ரயில்வே உதவி பொறியாளர், அவரது மனைவி மற்றும் 10 வயது மகள் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் அஜய் விமல் (45). இவர் தனது மனைவி நீலம் (38) மற்றும் 10 வயது மகள் ஜான்வி ஆகியோருடன் முகுந்த்பூர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்து வந்தார். இன்று அதிகாலை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர்களது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறி, தீ மளமளவென பரவியது.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், வீட்டிற்குள் சிக்கிய அஜய் விமல், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில்வே அதிகாரி தனது குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

