உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் காசிகவாங் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 80). இவருடைய கணவர் துளசிராம் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ராஜாராம் ( 35). ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
மது குடிக்க பணம் கேட்டு ராஜாராம் தனது தாயாருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக தாய்க்கும், மகனுக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்தது. இந்நிலையில், ராஜாராம் நேற்று தனது தாயாரிடம் மது குடிக்க ரூ. 40 பணம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், ராஜாராமிற்கு பணம் கொடுக்க ராஜேஸ்வரி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாராம் தாயை வீட்டிற்கு வெளியே தரதரவென இழுத்துவந்து அங்கு கிடந்த செங்கலால் கடுமையாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயேராஜேஸ்வரி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ராஜாராமை கைது செய்தனர். மேலும், இந்த கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.