முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, திமுக மாநில மகளிர் தொண்டரணி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெயா் மாற்றத்தின் மூலம் மட்டுமல்லாது பல்வேறு சீர்மிகு திட்டங்களின் வாயிலாகவும் திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளை முன்னேற்றம் அடையச் செய்தவர் கலைஞர் கருணாநிதி என்பதை விளக்கும் வகையில் ‘ஒதுக்கப்பட்டவா்களை அரவணைத்த கலைஞர்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு தூத்துக்குடி ஆறுமுக நாடார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் (முன்னாள் எம்.பி), திமுக தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, திமுக மகளிர் தொண்டரணி இணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார் (எம்.எல்.ஏ) திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்
விஜிலா சத்தியானந்த், திமுக பிரசாரக் குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக கட்சி நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகள் – மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து கனிமொழி எம்.பி விருதுகள் வழங்கினார். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவையை விண்ணப்பங்களாக பெற்று அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும் கனிமொழி எம்.பி. உறுதியளித்தார்.