சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சிவகிரி விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி ராமசாமி, பாக்கியம் ஆகியோர் கொலை செய்யப்பட்டு 10.75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், இது தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அறச்சலூரைச் சோ்ந்த ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷ் மற்றும் சென்னிமலை, பசுவப்பட்டியைச் சோ்ந்த நகை வியாபாரி ஞானசேகரனும் கைது செய்யப்பட்டனா்.
இதற்கிடையே, திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைகவுண்டன்பாளையத்தில் வயதான தம்பதி தெய்வசிகாமணி, அலுமேலு, இவா்களின் மகன் செந்தில்குமாா் ஆகியோா் கொலை வழக்கில் ஆச்சியப்பன், மாதேஷ்வரன், ரமேஷுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் இவா்கள் மூவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவர்கள் மூவருக்கும் பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் இவர்களை கஸ்டடி எடுத்து விசாரணை செய்தனர்.
இதேபோல மேலும் சில வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெறும் வகையில், இன்று இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.