Skip to content
Home » மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி…. பக்தர்கள் புனித நீராடல்

  • by Senthil

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி முப்பது நாளும் நடைபெறும் துலா உற்சவம் பிரசித்தி பெற்ற விழாவாகும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகள் கூடி கருமை நிறம் அடைந்த கங்கை முதலான புண்ணிய நதிகள் தங்களுக்கு விமோசனம் கோரி சிவபெருமானிடம் முறையிட்டபோது, அவர் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி விமோசனம் பெற அருளியதாகவும், அவ்வாறே காவிரியில் தங்கி புனித நீராடி வந்த கங்கை முதலான நதிகளுக்கு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று சிவபெருமான் காட்சியளித்து விமோசனம் அளித்ததாகவும் ஐதீகம். இந்த ஐதீக விழா ஒவ்வொரு ஆண்டும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாதம் 30 நாட்களும் மாயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஐப்பசி மாதம் 30 ம் தேதி நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரி உற்சவத்தில் காவிரியின் இரு கரைகளிலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டு அஸ்திரதேவருக்கு நடைபெறும் கடை முக தீர்த்தவாரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடுவார்கள்.

இன்று  கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் மதியம் 1.30 மணி அளவில் நடைபெற்றது. காவிரியின் தென்கரையில் மாயூரநாதர், ஐயாரப்பர், துலாக்கட்டம் காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். வடக்கு கரையில் வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

தொடர்ந்து நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கடை முகத்தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தம் அளித்தபோது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர். பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவையொட்டி மயிலாடுதுறை நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் மூன்று மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!