ஜம்மு-காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த வீரசிவாஜி என்ற மாணவர் கலந்துகொண்டு இறுதிப்போட்டியில் பஞ்சாப் வீரரை எதிர்கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரசிவாஜிக்கு, பல்லவராயன்பேட்டை கிராமத்தில் அந்த சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் திரண்டு, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவன் வீரசிவாஜியை சாலையில் இருந்து வீடு வரை தங்கள் தோளில் சுமந்துசென்று கொண்டாடினர்.