நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களுக்குமுன் நேபாளத்தில் 20க்கும் மேற்பட்ட சமூகவலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது. இதனால், அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்டது. இதில், ராணுவம் நடத்திய தாக்குதலுல் 22 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சமூகவலைதள செயலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. அதேவேளை, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவகலங்களை அடித்து நொறுக்கினர்.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சந்திரா பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரும் நாட்டை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.