Skip to content
Home » பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Senthil

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ் வருகைக்கு முன்பு போடப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு கட்சித் தொண்டரான முதியவர் ஒருவர் குத்தாட்டம் போட்டார் . மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று கட்சித் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்தனர். அப்போது எம்ஜிஆர்  வேடத்தில் வந்த தொண்டர் ஒருவர் சால்வை அணிவிக்க வந்தபோது அந்த சால்வையை கையில் வாங்கி ஓ.பன்னீர்செல்வம் அவருக்கே திருப்பி அணிவித்தார்.

கூட்டத்தில்  ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களின் உரிமையை காலில் போட்டு மிதித்துள்ளார். கட்சியை மீண்டும் மீட்டெடுத்து தொண்டர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது.

அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வகுத்த விதிகளை மீறி, எடப்பாடி பழனிச்சாமி தனக்காக  கட்சியை மாற்றி அமைத்துள்ளார். அதிமுகவில் இப்போது பணம் படைத்தவர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும்.

பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் தொண்டர்கள் அவரை அந்த பதவியில் இருந்து தூக்கி எறிவார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தமிழகத்திற்கு வந்த அமித்ஷா சசிகலாவையும், தினகரனையும் கட்சியில் மீண்டும் இணைக்க சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!