Skip to content
Home » பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வரும்  8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கி இருந்தது என கூறப்படுகிறது. அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டனர்.

இதில், ஜெப் கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்து விட்டார். அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. எல்லை பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரிய வரவில்லை.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் கடந்த செவ்வாய்க் கிழமை பேரணிநடத்தினர். அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, பைக்குகளில் அவர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!