Skip to content

மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் என்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளன. மெஸ்ஸியைப் பார்க்க வந்த ரசிகர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டில் பெரிய குறைபாடு இருந்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் மம்தா அறிவித்தார். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். ரசிகர்களின் ஏமாற்றம், நிர்வாகத் தோல்வி ஆகியவை இந்த குழப்பத்திற்கு காரணம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மெஸ்ஸியின் இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நேரம் செலவிடாமல் சென்றது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மம்தாவின் மன்னிப்பு, சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. இந்த விசாரணை முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொல்கத்தாவில் மெஸ்ஸி நிகழ்வில் பங்கேற்ற ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தைத் திருப்பித் தர ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குவங்க டிஜிபி ராஜீவ் குமார் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!