நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. முதல் கூட்டத்தில் இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி காலையில் ஜனாதிபதி முர்மு பாரம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். அவரது சாரட் வண்டிக்கு முன்னால் குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.
அவர் நாடாளுமன்றத்தை அடைந்ததும் குதிரைப்படை வீரர்கள் ஜனாதிபதிக்கு மரியாதை செய்யும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். அதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற மெயின் வாயிலில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் நின்று ஜனாதிபதியை நாடாளமன்றத்துக்குள் அழைத்து சென்றனர்.
அவர்களுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட செங்கோல் ஏந்தியபடி ஒருவர் சென்றார். ஜனாதிபதி வருகிறார் என நாடாளுமன்ற மண்டபத்தில் அறிவிக்கப்பட்டதும் அங்கிருந்த எம்.பிக்கள் அனைவரும்
எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவர்களுக்கு ஜனாதிபதி வணக்கம் தெரிவித்தார். பின்னர் சபாநாயகர் இருக்கைக்கு சென்றார் ஜனாதிபதி. அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தேசிய கீதம் முடிந்ததும் ஜனாதிபதி முர்மு உரையாற்றத் தொடங்கினார். சரியாக 11 மணிக்கு அவரது உரை தொடங்கியது. அனைத்து துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வருகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்று முன்னேறி வருகிறோம். விளையாட்டுத்துறையில் முன்னேறி உள்ளோம். வேலை வாய்ப்புகளை அதிகரித்து உள்ளோம் . பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு திட்டங்கள் தீட்டி உள்ளது. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2023 சாதனைகளின் ஆண்டாக அமைந்தது . ராமர் கோயில் அமைத்தது பெருமைக்குரியது.
இவ்வாறு அவர் உரையாற்றி வருகிறார்.
நாளை மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.