இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள பழங்குடியின மாணவர்களும், குகி பழங்குடியினத்தவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டன.இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,108 பேர் காயம் அடைந்தனர். 60 ஆயிரம் பேர் தாங்கள் வசித்த பகுதிகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
2 ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு ஆளும் பாஜக அரசால் தீர்வு காண முடியவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பிரேன் சிங், தனது பதவியை ராஜினாமா செய்தார். கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், மணிப்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசு தலைவர் ஆட்சி ஆகஸ்ட் 13ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 2026ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.