மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும் என்பது தெளிவாக தெரிகிறது. இருப்பினும், இதனை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை கண்காணித்து வணிகர்கள் சிலிண்டர்களை பதுக்கி இருக்கலாம் என கூறுகிறார்கள். இதனால் சிலிண்டர்களை பதுக்குபவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதவிர சிலிண்டர் வினியோகத்தில் உள்ள பிரச்சினைகளை ஆராய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் 3 நிர்வாக இயக்குனர்களை கொண்ட ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இது ஓட்டல்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்களுக்கான கியாஸ் சிலிண்டர் வினியோகத்தை ஆய்வு செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், சிலிண்டர் தட்டுப்பாடு நிலவு வரும் சூழலில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சட்டம்-ஒழுங்கு சீர்குலையாமல் பேணிக்காக்க வேண்டும். கள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் விற்காமல் தடுக்க வேண்டும். தேவையான சிலிண்டர் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மாநிலங்களில் உள்ள அதிகாரிகளிடம் அவ்வப்போது ஆலோசனை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

