காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைந்துள்ளது. டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன், அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் இன்று காலை யாத்திரை மேற்கொண்டனர். இந்நிலையில், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இன்று மாலை நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் இணைந்து சிறிது தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.