சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்து, வாலிபர்களிடம் பணம் பறித்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைச் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலி ஐ.டி-களை உருவாக்கி அதில் ஆபாசமான விளம்பரங்களைச் செய்துள்ளார். அதில் ஒரு வாட்ஸ்அப் எண்ணைக் குறிப்பிட்டு, “உங்களுக்குப் பிடித்த வயதுடைய இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம், ஆபாச வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யலாம்” என ஆசைவார்த்தை கூறி விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி அந்த எண்ணைத் தொடர்பு கொண்டவர்களிடம் நபிலா பேகம் பேசியுள்ளார்.
அப்போது, வீடியோ காலில் பேசுவதற்கு ஒரு தொகை, ஆடையின்றி நிர்வாணமாகப் பேசத் தனித் தொகை, நேரில் வந்து உல்லாசமாக இருக்க ஒரு தொகை எனப் பல பிரிவுகளில் கட்டணங்களை நிர்ணயித்து வசூலித்துள்ளார். இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் பல வாலிபர்கள் இவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளனர். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட நபிலா பேகம், அவர்களை ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட நபிலா பேகத்தை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் பல்வேறு நபர்களிடம் இதுபோன்று ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்தது. இது போன்ற ஆபாச விளம்பரங்களையும், அடையாளம் தெரியாத நபர்களின் ஆசைவார்த்தைகளையும் நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

