தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்த குபேந்திரன் என்பவர் தலைமையில் வந்த கோட்டைக்காடு கிராம மக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கடந்தகுடி பஞ்சாயத்து உட்பட்ட கோட்டக்காடு கிராமத்தில் நூறு குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவது என்றால் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள விக்ரமம் என்ற கிராமத்திற்கு சென்று வாங்க வேண்டும். பகுதியை சேர்ந்த நாங்கள் கூலித் தொழிலாளர்கள் .ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு இரண்டு மூன்று முறை அலைய வேண்டிய நிலை உள்ளது..
அதனால் கூலி வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே எங்களின் கோட்டக்காடு கிராமத்திலேயே பகுதி நேர அங்காடி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் பயன்பெறுவர். இது குறித்து பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தோட்டக்காடு கிராமத்தில் பகுதி நேர அங்காடியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.