திருச்சி ஸ்ரீரங்கம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (19). இவர் கொள்ளிடம் கரையில் முருகன் கோவில் வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வழிபறியில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் கும்படம், சிங்கர் கோயில் தெருவை சேர்ந்த விக்கி என்கிற ராமச்சந்திரன்(21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த ஹரிஹரன் என்கிற வெள்ளி குஞ்சான்(23) என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
————————————————————————————————————————————————————–
திருச்சியில் 7 லட்சம் மோசடி…. 3 பேர் மீது வழக்கு…
திருச்சி புதுக்கோட்டை மெயின் ரோடு மயூரா காம்ப்ளக்ஸ் பகுதியில் சபீர்(52) என்பவர் பர்னிச்சர் கடை நடத்தி வருவதோடு கட்டுமான ஒப்பந்த பணியும் மேற்கொண்டு வருகிறார். இவரிடம் வந்த செந்தில்குமார் அவரின் மனைவி அனிதா மற்றும் சதீஷ் ஆகியோர் வீடு ஒன்று கட்டித்தர ஒப்பந்தம் செய்துள்ளனர். ஒப்பந்தத்தின்படி சபீர் வீடு கட்டுமான பணியை முடித்து அவர்களிடம் வீட்டை ஒப்படைத்துள்ளார். மீதி தொகை 7 லட்சம் கேட்டபோது அவர்கள் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டது. கோர்ட் உத்தரவின்படி 3 பேர் மீதும் கண்ட்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.