Skip to content

ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.57 லட்சம் மோசடி: ஐ.டி. ஊழியர் தவிப்பு

தஞ்சாவூரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் (IT) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி, இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பெரும் லாபம் ஈட்டலாம் என்று ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.

அந்தத் தகவலில் இருந்த போலி தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டபோது, மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு செயலியைப் (App) பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளார்.அந்தச் செயலியில் ஆரம்பத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்த ஐ.டி. ஊழியருக்கு, லாபமாக 4 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.

மேலும், அந்தச் செயலியின் வாலட்டில் (Wallet) அவருக்கு 4 கோடி ரூபாய் லாபம் வந்துள்ளதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இதை உண்மை என்று நம்பிய அவர், அந்தத் தொகையைப் பெறுவதற்காகப் பல்வேறு தவணைகளாக மொத்தம் 57 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.முதலீடு செய்த பிறகு லாபத் தொகையைத் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றபோது, அந்தச் செயலியின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மர்ம நபரின் தொலைபேசி எண்ணும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!