உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் இன்று 1,415-வது நாளை எட்டியுள்ளது. உலக நாடுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு மத்தியிலும் போர் நின்றபாடில்லை. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று இரவு ரஷிய ராணுவம் அதிரடியாக ஏவுகணை மற்றும் டிரோன் (Drones) மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ரஷியா தனது தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

