சசிகலாவும் பிரதமர் மோடி கூறிதான் கட்சி தொடங்கி இருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறது. பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது மாவட்டத்தில் 835 கோடி ரூபாய்க்கு அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது.வள்ளியூரில் மாவட்ட நீதிமன்றம், ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் வள்ளியூர் மாவட்ட நீதிமன்றம் திறக்கப்பட இருக்கிறது. அதில் நாங்கள் எல்லாம் கலந்து கொள்ள முடியாது. நெல்லையப்பர் கோவிலுக்கும் ஏராளமான நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது. எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெரும் சவால் ஆளுநர் ரவி. வாசிப்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறிவிட்டார்கள். ஐந்து ஆண்டுகால ஆட்சியில் என்னை சபாநாயகராக தமிழக முதலமைச்சர் அமர வைத்திருக்கிறார். அது எனக்குப் பெருமை. பல நாடுகளுக்கு பிரதமர் போய் வருவது பெரிதல்ல , அவர்களோடு எப்படி உறவு வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். பிரதமர் உலகம் சுற்றி என்ன பிரயோஜனம்? நோ யூஸ்.
தூத்துக்குடியில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த குற்றத்திற்கும் போலியான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. ராதாபுரம் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று நான் விருப்ப மனு கொடுத்திருக்கிறேன். வாய்ப்பு வழங்குவதும் வழங்காததும் தளபதி முடிவு செய்வார். புஸ்ஸி ஆனந்த், அமித்ஷா நண்பர்கள் அவர்கள் சொல்லித்தான் விஜய் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் நாம் பாஜக கூட்டணிக்கு போகலாமா வேண்டாமா என்று தமிழக வெற்றிக்கழக தொண்டர்களிடம் கேட்டுள்ளார். அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யவில்லை. காரணம் என்னவென்றால் தமிழக வெற்றி கழகத்தோடு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்புமணி உடன் இருப்பவர்களும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறார்கள். சசிகலா தற்பொழுது ஒரு கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவரும் பிரதமர் கூறிதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியை காலி செய்வதற்காக இவ்வளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.எத்தனை முறை போட்டிட்டாலும் மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தான் வாக்களிப்பார்கள்” என்று கூறினார்.

