Skip to content
Home » சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

  • by Senthil

சேலம்  மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர ஐ-லவ் குரும்பப்பட்டி பூங்கா என்ற சின்னம் ஆர்டின் சிம்பலுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் விளையாட்டு பகுதியை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பூங்காவில் புள்ளிமான், கடமான், முதலை, மலைப்பாம்பு, குரங்கு, நரி, வண்ணப்பறவைகள், வெள்ளை மயில் என 200க்கும் மேற்பட்ட வன உயிரினங்களை பராமரித்து வருகின்றனர். இரண்டாம் நிலை உயிரியல் பூங்காவாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பல்வேறு மேம்பாட்டு பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதில், பூங்காவை விரிவாக்கம் செய்து கரடி, சிறுத்தை உள்ளிட்ட பெரிய விலங்குகளை கொண்டு வந்து மக்கள் பார்வைக்கு விட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், பூங்காவினுள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதில், செயற்கை நீரூற்று இருக்கும் இடத்தின் முன்பு ஐ லவ் குரும்பப்பட்டி ஜூ என சின்னம் அமைத்து வருகின்றனர். லவ் சிம்பலுடன் குரங்கு, பறவை, யானை ஆகிய உருவங்களும் எழுத்தில் இடம் பெற்றுள்ளது. பார்க்க மிகவும் அழகாக இருக்கும் இந்த சின்னத்தில் லவ் சிம்பல் பின்னால் நின்று, சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

அங்கு புதிதாக ₹15 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்களை அமைக்கின்றனர். ஊஞ்சல்கள், பார் கம்பி, சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட உபகரணங்களை சிறுவர்கள் வெகுவாக பயன்படுத்துகின்றனர்.

சேலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் நபர்கள், இப்பூங்காவிற்கு வருகின்றனர். அதனால், வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. பூங்காவிற்குள் செல்ல சுற்றுலா பயணிகள், பணத்தை செலுத்தி டிக்கெட் எடுத்து வந்த நிலையில், தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையையும் வனத்துறை துவங்கியுள்ளது. டிக்கெட் கவுன்டர் பகுதியில் டிஜிட்டல் பார்கோடு ஸ்கேன் வைத்துள்ளனர். அதன் மூலமும் பலர் டிக்கெட் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி, நேற்று குரும்பப்பட்டி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்திருந்தனர். குடும்பம், குடும்பமாக வந்திருந்தவர்கள், பூங்காவை சுற்றி வந்து விலங்குகளை பார்த்து ரசித்தனர். 3டி ஓவியம், செயற்கை நீருற்று பகுதிகளில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். வண்ணப்பறவைகள், வெள்ளை மயில், புள்ளிமான், முதலை போன்றவற்றை பார்த்து மகிழ்ந்தனர். பூங்காவின் இயக்குநர் செல்வகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். நேற்றைய தினம் மட்டும் பெரியவர்கள் 3,180 பேரும், சிறியவர்கள் 671 பேரும், குழந்தைகள் 199 பேரும் என்று மொத்தம் 4,072 பேர் வந்திருந்தனர். இவர்களிடம் இருந்து ₹1.97 லட்சம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!