சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு ஒரு நாளைக்கு ஐயப்பனை தரிசிக்க 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் உடனடி தரிசன பதிவு மூலம் அதிகப்படியான பக்தர்கள் வருகிறார்கள். எனவே இனி வரும் நாட்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், குழந்தைகளுக்கு தனி வரிசையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இதற்கிடையே வருகிற 27-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நடக்கிறது. இதனையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி 23-ந் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். பிறகு தலைச்சுமையாக தங்க அங்கி சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படும். மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். இதனால் அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு உச்ச பூஜைக்கு பின்னர் 1.30 மணிக்கு நடை அடைக்கப்படும். அதைத்தொடர்ந்து பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை. அதே போல் மதியம் முதல் பம்பையில் இருந்து மலையேறவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீபாராதனைக்கு பிறகு மாலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் .