Skip to content

மது குடிக்கப் பணம் தராத தாய் – கல்லைப் போட்டு கொலை செய்த மகன் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி பாக்கியம் (51). இவர்களது மகன் வேலுச்சாமி(32). சுப்பிரமணியன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். வேலுச்சாமி மீது ஏற்கனவே தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஓராண்டு சிறையில் இருந்த அவர், சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே, வேலுச்சாமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் ராஜா புதுக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படும் வேலுச்சாமி, வேலைக்குச் செல்லாமல் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதற்காகத் தனது தாய் பாக்கியத்திடம் அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டின் முன்னால் நின்றுகொண்டிருந்த பாக்கியத்திடம் வேலுச்சாமி மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார்.
பாக்கியம் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, வீட்டிலிருந்த அரிவாள்மனையால் தாயை சரமாரியாக வெட்டியுள்ளார். பாக்கியம் நிலைகுலைந்து கீழே விழுந்த நிலையில், அருகில் கிடந்த பெரிய கல்லைத் தூக்கி அவர் தலையில் போட்டுள்ளார். பாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்ட வேலுச்சாமி அங்கிருந்து தப்பியோடினார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியத்தை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாக்கியம் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த வேலுச்சாமியை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!