Skip to content
Home » மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

மகன் எழுதி வாங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்… தஞ்சை கலெக்டரிடம் தாய் மனு…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி ராமு அம்மாள் (84) என்பவர் வாக்கர் உதவியுடன் தள்ளாடியபடியே நடந்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தேன். பின்னர் சொந்த ஊருக்கு வந்து கிடைக்கும் வேலையை செய்து வந்தேன். இட்லி வியாபாரம், காய்கறி வியாபாரம் போன்றவையும் செய்து வந்தேன். தற்போது வயது முதிர்வால் என்னால் முன்பு போல் வேலை பார்க்க முடியவில்லை. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் எனது மகன் முருகானந்தம் எனது சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டார். நான் அணிந்திருந்த நகைகளை விற்று அவருக்கு நான் வீடு கட்டி கொடுத்தேன். ஆனால் என்னை சரிவர கவனிப்பதில்லை. மகனுடன் சேர்ந்து மருமகளும் என்னை அடித்து துன்புறுத்துகிறார். இதனால் நான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். கோர்ட் உத்தரவுப்படி மாதந்தோறும் ரூ.2000 மட்டும் என் மகன் அனுப்புகிறார். என் காலில் அடிபட்டு படுத்த படுக்கையாக மிகவும் பாதிக்கப்பட்டு கிடந்தேன். என் மகள் தான் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தார்.

ஆனால் மகன் சரிவர கவனிக்காமல் அடித்து துன்புறுத்துகிறார். வயதான காலத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை. என் மகன் என்னிடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்ட சொத்துக்களை என்னிடம் மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!