சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, அவரது இன்ஸ்டாகிராம் ஐ.டி.க்கு ராகுல் என்ற பெயரில் ரெக்வஸ்ட் வந்துள்ளது. இதனை அக்செப்ட் செய்து மாணவி அந்தபேசியுள்ளார். அந்த நபர் ஈரோட்டை சேர்ந்த ராகுல் எனவும், தான் கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். இதனிடையே மாணவியை பார்க்க விரும்புவதாக, ராகுல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேரில் வருவதாக தெரிவித்த மாணவி, நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டார்.
அப்போது மாணவியை தொடர்பு கொண்ட ராகுல், தான் சேலத்திற்கு வந்துள்ளதாகவும், அங்கு இறங்கி விட்டால், பஸ்சில் ஈரோட்டிற்கு சென்று விடலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மாணவி, அன்றிரவு சுமார் 9 மணியளவில் சேலம் ரயில் நிலையத்தில் காதலனை சந்தித்துள்ளார். பின்னர் ரயில் நிலையம் அருகில் உள்ள கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அப்போது, `நகைகளுடன் இருந்தால், யாரேனும் உன்னை ஏமாற்றி பறித்து சென்று விடுவார்கள், அதனால் தன்னிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு ராகுல் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி, தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் செயின் மற்றும் லேப்டாப், செல்போன் வைத்திருந்த பை என சுமார் ரூ.1.55 லட்சம் மதிப்பிலான பொருட்களை ராகுலிடம் கொடுத்துவிட்டு சென்றார்.
சிறிது நேரம் கழித்து கழிவறையிலிருந்து மாணவி திரும்பி வந்து பார்த்தபோது ராகுல் இல்லை. இதனால் பதற்றத்தில் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ரயில் நிலையம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் விரைந்து வந்து, சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றி நகை பறித்து சென்றவரை தேடி வருகின்றனர்.