Skip to content
Home » திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

திருச்சி அதிமுகவில் சேலம் இளங்கோவன் .. சுப்புனி சொல்லுறத கேளுங்க..

  • by Senthil

நன்றி : அரசியல் அடையாளம்.. 

 

மழை மிதமாக பொழிந்து கொண்டே இருக்க, குடைபிடித்தபடி சுப்புனி காபி கடைக்கு நடந்து வந்தார் காஜா பாய். ஏற்கனவே பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதியும் காத்திருக்க குளிர்ந்த சூழலிலும், அரசியல் பற்றி சூடாக பேச ஆரம்பித்தனர் மூவரும்.
திருச்சி மாவட்ட அதிமுக சர்ச்சை கூடாரமாக மாறி இருக்கிறது என்ற முன்கதையும் தனக்கு தெரிந்த தகவல்களை காஜா பாய் ஆரம்பிக்க, 2 பேரும் காதுகளை திருப்பி கவனமாக கேட்க துவங்கினர். அதாவது திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக அண்மையில் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இந்த மாவட்டத்தில் பொருளாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு இப்ராம்ஷா என்பவரை நியமிக்க சீனிவாசன் பரிந்துரை செய்துள்ளார் என்று காஜா பாய் கூற, இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என சகாயம் கேட்க, அவசரப்படாத சகாயம் சொல்கிறேன் எனக்கூறிய காஜா பாய், இப்ராம்ஷா சமீபத்தில் தான் அதிமுகவில் சேர்ந்தார். இவர் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடமும், அவரது மகன் ஜவகர்லாலிடமும் நெருக்கமாக இருப்பவர். தினமும் ஜவகர்லாலிடம் மணிக்கணக்கில் செல்போனில் பேசுவாராம். ஓபிஎஸ் அணியில் உள்ளவர்களிடம் நெருக்கமாக இருப்பவருக்கு, அதிமுகவில் பதவி தரலாமா என்பது தான் சர்ச்சையே. இப்ராம்ஷா, ஜவகர்லாரிடம் செல்போனில் பேசிய ஹிஸ்டரி லிஸ்டை எடுத்து ஆதாரத்துடன் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மாவட்ட பொறுப்பாளர் மாஜி அமைச்சர் தங்கமணி ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர்.
இந்த சர்ச்சை ஒருபுறமிருக்கு, திருச்சி மாவட்ட அதிமுகவில் இன்னொரு சர்ச்சையும் வெடித்துள்ளது. வடக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் பரஞ்சோதி. பேனர், போஸ்டர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களோடு, எடப்பாடி, தங்கமணி படத்தை அச்சிடுவது வழக்கம். ஆனால் அண்மையில் பரஞ்சோதி நடத்திய கட்சி கூட்டத்துக்கு அடிக்கப்பட்ட பேனரில் எடப்பாடி படத்தோடு, சேலம் இளங்கோவன் படமும் இடம் பெற்றிருந்தது. இவர் எடப்பாடியின் பினாமி என அழைக்கப்படுபவர். இது பற்றி விசாரித்த போது, இளங்கோவன் தான், பரஞ்சோதிக்கு மாவட்ட செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்துள்ளார். இதனால் தான் பரஞ்சோதி இளங்கோவன் படத்தை அச்சிட்டு விசுவாசத்தை காட்டி உள்ளார் என பரவலாக பேசப்படுகிறது. திருச்சி அதிமுகவில் நடக்கும் இந்த களேபரங்களை பார்த்து, கட்சியின் நிலை இப்படி ஆகி விட்டதே என ரத்தத்தின் ரத்தங்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள் என சொல்லி முடித்தார் காஜா பாய்.
அவரை தொடர்ந்து திருச்சி மாநகர போலீசில் நடந்த களேபரம் பற்றி சகாயம் திருவாய் மலர்ந்தார். அதாவது தீபாவளி நேரத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்களின் நலன் காக்கவும் என்எஸ்பி ரோட்டில் காவல் உதவி மையம் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை காவல் உதவி மையம் திறக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் காமினி மையத்தை திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். இந்த செய்தி குறிப்பிட்ட சில நாளிதழ்கள் மற்றும் மீடியாக்களிடம் மட்டுமே வந்தது. வழக்கமாக காவல்துறைக்கென்று அனைத்து பத்திரிகை நிருபர்கள் அடங்கிய ஒரு வாட்ஸ்அப் குரூப் உள்ளது. அந்த குரூப்பில் தான், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை ஐஎஸ் எஸ்ஐ ஒருவர், வாட்ஸ்அப் குரூப்பில் அழைப்பு விடுக்காமல், தனக்கு வேண்டிய நிருபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாநகர காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவம் பற்றி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று சகாயம் கூறினார்.
அடுத்ததாக தன் பங்குக்கு சகாயம், நடிகர் விஜய் மேட்டர் பற்றி சொல்ல ஆரம்பித்தார். 2024 பாராளுமன்ற தேர்தலில் விஜய் அரசியலுக்கு வந்து விடுவார் என பேசப்பட்டது. ஆனால் சென்னையில் நடந்த லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய், 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று பேசி உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக இருந்திருந்தால், இந்நேரம் விஜய் தனது கட்சியை பதிவு செய்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. அதேசமயம், பாராளுமன்ற தேர்தலில் முக்கிய தேசிய கட்சி ஒன்றுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கலாம் என விஜய் முடிவு செய்திருந்தாராம். ஆனால் மத்தியில் அரசியல் ஓட்டம் மாற்றத்தை சந்திக்கலாம் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாம். அந்த மாற்றம் நிகழ்ந்தால், சிக்கலில் மாட்டிக்கொள்வோம். எனவே பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்ற முடிவை விஜய் எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன என சகாயம் சொல்லி முடிக்க காபி கடை பெஞ்ச் காலியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!