வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பூதலூர், சித்திரக்குடி, ஆலக்குடி, வல்லம் போன்ற பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. பின்னர் மழை பெய்யவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் மழையால் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ஆப்தமித்ரா என்கிற பேரிடர் கால நண்பர்கள் திட்டத்தில் பயிற்சி பெற்ற 300 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு , பேரிடர் கால மீட்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. உயிர் காக்கும் கவசம், கையுறை, கத்தி, முதலுதவி பெட்டி, தலைக்கவசம் உள்பட 14 உபகரணங்கள் அடங்கிய அவசர கால பெட்டகம் வழங்கப்பட்டு, அந்தந்த வட்டத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் நிகழ்ந்த பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணி மேற்கொள்ளும் விதமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.