Skip to content

வாக்குவாதம், வெளிநடப்பு, தர்ணா: 10 நிமிடத்தில் முடிந்த தஞ்சை மாநகராட்சி கூட்டம்

  • by Authour

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில்  இன்று காலை தொடங்கியது. முதல்வருக்கு நன்றி  தெரிவித்து பேச  மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை   மேயர் அழைத்தார்.

அப்போது 12 வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் எழுந்து பேச தொடங்கினார். அப்போது மேயர் நீங்கள் உங்கள் முறை வரும் பொழுது பேசுங்கள் என்று தெரிவித்தார். இருப்பினும் கவுன்சிலர் வெங்கடேஷ் இந்த கூட்டத்திற்கான அறிவிப்பு ஆறு நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை இன்று காலை தான் எங்களுக்கு வந்தது. 21 கவுன்சிலர்கள் அஜந்தாவை வாங்கவில்லை என கூறினார்.

ஆணையர் : மூன்று நாட்களுக்கு முன்பு அஜெண்டா கொடுத்து கூட்டத்தை நடத்தலாம்.

மேயர் : இனி வரும் கூட்டங்கள் குறித்து முன்பே அறிவிப்பு கொடுத்து நடத்துவோம் இப்பொழுது கூட்டத்தை நடத்தலாம்.

வெங்கடேஷ் : விதிமுறை மீறி நடத்தப்படும் இந்த கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது.

மேயர்: கூட்டத்தை ரத்து செய்ய முடியாது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசலாம்.

இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் வெங்கடேஷ், ஆனந்த், அண்ணா பிரகாஷ், சுந்தர செல்வி, நீலகண்டன், செந்தில்குமாரி, உஷா, சுகந்தா கண்ணன், சுகந்தி, கலையரசன் உட்பட 19 கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று எழுந்து வெளியேறினர்.

இதற்கிடையில் எதிர்க்கட்சி கவுன்சிலர் கண்ணுக்கு இனியாள் உட்பட  சில கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

மேயர் : கூட்டத்தை  நடத்துவோம் அமருங்கள்.

அப்போது வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள், கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். கூட்டத்தை நடத்தக்கூடாது என்று தெரிவித்ததால்  கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவருக்கும் கண்ணுக்கு இனியாளுக்கும் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து மேயர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்து கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

பின்னர் வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையர் கண்ணனை சந்திக்க அவரது அறைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் அறை வாயிலேயே அமர்ந்து தர்ணா செய்தனர். சிறிது நேரத்தில் அவர்களும் இடத்தை காலி செய்து கிளம்பினர்.

தஞ்சை திமுக எம்.எல்.ஏ. நீலமேகத்துக்கும், மேயர் சண். ராமநாதனுக்கும்  இடையே உள்ள கோஷ்டி  பூசல் தான் மாநகராட்சியில் நடந்த  வாக்குவாதம், தர்ணாவுக்க காரணம் என தஞ்சை மக்கள் கூறினர்.

error: Content is protected !!