வல்லம், டிச.24- தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதி 11 ல் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 969 புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடற்ற ஏழை, எளிய மக்களுக்காகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்காகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆட்சேபகரமான நீர் நிலை புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களை மீள் குடியமர்வு செய்வதற்காக மாநில, ஒன்றிய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நகர்ப்புற ஏழை எளியோருக்கான நிலையான ஒன்றிணைந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வல்லம் பேரூராட்சியில் 8 ஏக்கர் பரப்பளவில் ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அய்யனார் கோவில் திட்டப்பகுதி-II-ல் 13 தொகுப்புகளில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் 408 சதுரஅடி பரப்பளவில் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிட தொகுப்பிலும் மின் தூக்கிகள், மின் ஆக்கிகள், இடிதாங்கிகள், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு

கட்டமைப்புகள் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டப்பகுதியில் தார் சாலைகள், அங்கன் வாடி, பால் வழங்கும் நிலையம், சமுதாய கூடம், கடைகள், வாழ்வாதார மையம், நூலகம், நியாய விலை கடை, மழை நீர் சேகரிப்பு அலகு, சுகாதார துணை மையம், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், பூங்கா, நடைபாதை, சுற்று சுவர், பாதுகாப்பு அறை மற்றும் பசுமை பகுதி ஆகிய அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டப்பகுதிக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தனி குழாய் பாதை அமைத்து நாளொன்றுக்கு 7.44 இலட்சம் லிட்டர் வீதம் தண்ணீர் வசதி அளிக்கும் வகையில் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டப்பகுதியில் 4 (தலா 1.00 இலட்சம் லிட்டர்) கீழ்நிலைத் தண்ணீர் தொட்டிகளும், 162 மேல்நிலைத் தொட்டிகளும் (தலா 5500 லிட்டர்) மற்றும் 1 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் (6.00 இலட்சம் லிட்டர்) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்புகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகிந்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ஸ்ரேயா பி.சிங் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் எம்.பி ச.முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கோட்டாட்சியர் நித்யா, வல்லம் பேரூராட்சித் தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

