உலக தாய்மொழி தினத்தையொட்டி, “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், ஆண்டுதோறும் பிப்.21-ம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 1999-ல் யுனெஸ்கோ அறிவித்த இத்தினம், தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துவதுடன், அழிந்து வரும் மொழிகளை மீட்டெடுக்கவும் வழிவகை செய்கிறது. இளைய தலைமுறையினரிடம் தாய்மொழியின் சிறப்பை கொண்டு சேர்ப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழே நீ வாழ்ந்திடு!
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

