மத்தியப் பிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த முனீஷ் தனுக் என்பவரது மகள் நித்தி (21). இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணத்திற்கு முன்பே உறவுக்கார இளைஞர் ஒருவருடன் காதலில் இருந்த நித்தி, திருமணத்திற்குப் பின்னரும் அந்த உறவைத் தொடர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த நித்தி, தனது காதலனுடன் குவாலியர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து, அவரைத் திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். மகள் குடும்ப கௌரவத்தைக் கெடுத்துவிட்டதாக ஆத்திரத்தில் இருந்த முனீஷ், கடந்த திங்கட்கிழமை மகளைச் சந்தித்து சமாதானமாகப் பேசி தனது கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
கிராமத்திற்கு வந்த நித்தியைத் தனியாகப் பேச வேண்டும் என்று கூறி தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற முனீஷ், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்தார்.
இதில் நித்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், நித்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகளைக் கொலை செய்த தந்தை முனீஷைக் கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

