திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கடைவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒம்னி வேனை போதையில் கடத்திச் சென்று சாலை விபத்துக்களை ஏற்படுத்திய வாலிபரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பர்மா காலனி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் வரதராஜ் (40) இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்துள்ளார். அதை வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் வரதராஜ் புதிதாக வீடு கட்டி வருவதால், காட்டூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் முன்புநேற்று முன்தினம் மாலை தனது வேனை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவில் வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நண்பர்கள், உறவினர்களிடம் கூறி வேனை தேடும் பணியில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் வரதராஜின் வேன், திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியில் சாலையின் நடுவில் உள்ள பேரிகார்டு மீது மோதி விபத்துக்குள்ளாகி நிற்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்த்தார். அப்போது வேனை திருடிச்சென்ற நபர் விபத்துக்குள்ளாகி அங்கு காயங்களுடன் நின்றிருந்தார். பொதுமக்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வேனை திருடிக்கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே வேன் உரிமையாளர் வரதராஜூம் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் வேனை திருடிச்சென்றவரை திருவெறும்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர் பழனி தெற்கு நாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த காளிதாஸ் மகன் முனீஸ்வரன் ( 21 ) என்பது தெரியவந்தது.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
……..
மேலகல்கண்டார்கோட்டை தந்தை , மகன் கைது…..
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்( 41) இவரது தாய் ஜோஸ்பின் மேரி. அதே தெருவில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு மேல கல்கண்டார் கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த கார்த்தி வயது (23), அவரது தம்பி விஷ்வா வயது (20) ஆகிய இரண்டு பேரும் மாநகராட்சி கழிப்பிடம் அருகில் அமர்ந்திருந்தனர். இதனை ஜோஸ்பின் மேரி ஜெயராஜிடம் சொல்லி உள்ளார்.
அங்கு வந்த ஜெயராஜ் ,கார்த்தி மற்றும் விஷ்வாவை இரவு நேரத்தில் இங்கு அமரக்கூடாது என எச்சரித்துள்ளார் இதனை மீறி மீண்டும் அவர்கள் கழிப்பிடம் அருகில் அமர்ந்தனர். மீண்டும் இருவரையும் ஜெயராஜ் எச்சரித்துள்ளார். உடனடியாக கார்த்தியும் விஷ்வாவும் சேர்ந்து தங்களது தந்தை ரவிக்கு போன் செய்து புகார் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ரவி மற்றும் கார்த்தி விஷ்வா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஜெயராஜை தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஜெயராஜ் பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரவி மற்றும் விஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
……
திருச்சி… லாட்டரி சீட்டு விற்ற 17 பேர் கைது….
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தில்லை, நகர், பாலக்கரை, காந்தி மார்க்கெட், உறையூ,ர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த காவல் சரக்கத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தில்லைநகர், உறையூர், பாலக்கரை ,காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த 17 பேரை போலீசார் பிடித்து அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பணத்தையும், இருசக்கர வாகனங்களையும் கத்திகளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்து 17 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்