திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி வயது (39) இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் 11 ம் தேதி இரவு ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் வந்துள்ளார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை அடுத்த செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென தண்டபாணிக்கு மயக்கம் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய தண்டபாணி அருகில் உள்ள செந்தண்ணீர்புரம் பேருந்து நிழற்குடையில் அமர்ந்துள்ளார். அவரை அழைத்து வந்த நண்பர் அங்கிருந்து சென்று விட்டார். பயணிகள் நிழற்குடையில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த தண்டபாணி அதிகாலை 3 மணியளவில் கண்விழித்து பார்த்துள்ளார். அப்போது தான் அணிந்திருந்த தங்க செயின், மோதிரம் என 12 பவுன் நகைகள் மற்றும் செல்போனை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து நண்பர்களை உதவிக்கு அழைத்துக் கொண்டு பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் சம்பவம் நடந்த இடம் பாலக்கரை எல்லை என்று கூறி அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு தண்டபாணி சென்ற போது அவர்கள் சம்பவம் நடந்த இடம் பொன்மலை போலீஸ் நிலைய எல்லை தான் என்று அவர்களும் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் அங்குமிங்கும் அலைகழிக்கப்பட்ட தண்டபாணி இறுதியாக பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.