அமெரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அந்நாட்டு அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரத்து செய்யப்பட்ட விசாக்களில் 8,000 மாணவர் விசாக்களும் அடங்கும். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். விசா ரத்து செய்யப்பட்ட அனைவரும் விரைவில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்கள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. “அமெரிக்காவிற்கு விசா மூலம் வருபவர்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே நடக்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதை டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அமெரிக்க சட்டங்களை மீறும் மாணவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது. அவ்வாறு சட்டமீறலில் ஈடுபடும் மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். மேலும், அவர்கள் வருங்காலத்தில் மீண்டும் அமெரிக்க விசா பெற தகுதியற்றவர்களாக மாற்றப்படுவார்கள் என்றும் அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி குடியேற்றக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

