Skip to content

அமெரிக்காவின் அதிரடி வேட்டை: 3 எண்ணெய் கப்பல்கள் சிறைபிடிப்பு

வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்குள் அபாயகரமான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர்.

கடல் வழியாக போதைப்பொருட்களைக் கடத்தி வரும் கும்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதல்களில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் கடத்தலுக்குத் துணையாகச் செயல்படும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷ்யாவின் ‘மரைனிரா’ என்ற எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படையினர் சிறைபிடித்தனர். இந்தக் கப்பல் முதலில் ‘பெல்லா 1’ என்ற பெயரில் இயங்கியது. அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க ரஷ்யக் கொடியுடன் ‘மரைனிரா’ எனப் பெயரை மாற்றிக்கொண்டு சென்றபோது சிக்கியது. இதேபோல் ‘சோபியா’ என்ற மற்றொரு கப்பலையும் அமெரிக்கா பிடித்துள்ளது.

தற்போது ‘ஒலினா’ என்று பெயரிடப்பட்ட மேலும் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணைந்து சிறைபிடித்துள்ளன. ஐ.எஸ்.எஸ். ஐவோ ஜிமா, ஐ.எஸ்.எஸ். சான் ஆன்டனியோ மற்றும் ஐ.எஸ்.எஸ். போர்ட் லாடர்டேல் ஆகிய தாக்குதல் கப்பல்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து அமெரிக்காவின் தெற்கு பிராந்திய பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்தியில், “எங்கள் படைகள் கூட்டாக இணைந்து மேற்கத்திய பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை முடக்கி வருகிறோம். குற்றவாளிகளுக்கு எங்கும் அடைக்கலம் கிடையாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!