Skip to content

நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைப்பு: இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி அறிவிப்பு

  • by Authour

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான ஜென் இசட் குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்து இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இது குறித்து அந்நாட்டின் இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி, நாட்டு மக்களிடம் முதல் முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர்,

அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயது 18ல் இருந்து 16 ஆகக் குறைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிப்பதை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதை எட்டிய இளைய தலைமுறையினருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவும், வாக்காளர் பட்டியலை நீட்டிக்கவும் தற்போதுள்ள தேர்தல் சட்டம் ஒரு உத்தரவு மூலம் திருத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குடிமக்கள், இடம்பெயர்ந்து அண்டை நாட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இந்த புதிய சட்டத்திருத்தத்தின் மூலம்,16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

error: Content is protected !!