பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாநில அளவிலான அடைவு ஆய்வு தேர்வு அண்மையில் நடைபெற்றது. அந்த முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட அடைவுத் திறன் மீளாய்வு கூட்டம் இன்று தளவாபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில்…
கல்வி என்பது தற்சமயம் தேர்ச்சி எண்ணிக்கை அடிப்படையில் என்பதை தாண்டி தரமான கல்வியை நோக்கி நாம் பயணித்துக் கொண்டுள்ளோம்
தமிழகத்தை பொறுத்தவரை தேர்ச்சி அடிப்படையில் மிக சிறப்பாக இருந்தாலும் கற்றல் அடைவுகளை மேம்படுத்தும் தேர்வில் மாணவர்களின் திறமை குறைவாக உள்ளது. எனவே, இதை நோக்கியே ஆசிரியர்களின் பயணம் இனி இருக்க வேண்டும் குறிப்பாக மாணவர்களும் நேரடியாக கேள்வி கேட்பது மட்டுமல்லாமல் மறைமுகமாக கேள்விக்கான பதில்களை மாணவர்களிடம் கேட்கும் போது அவர்களுக்கான திறன் அதிகரிக்கும்.
அடைவு ஆய்வு தேர்வில் கரூர் மாவட்டம் 30வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் முன்னேற்றமடைய அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை மேம்படுத்த ஆசிரியர் கல்வி நிறுவனம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டு, மாதிரிச் செயல் திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிச் செயல் திட்டம் அறிதல், புரிதல், பயன்பாடு, திறன்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றார். ஆய்வு கூட்டத்தில் கரூர் மாவட்டம் நான்கு கல்வி வட்டாரத்தைச் சார்ந்த 470 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.