Skip to content

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார்.

இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென  பதவியை ராஜினாமா செய்தது இதுவே முதல் முறை என்பதால் இந்திய அரசியல் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

சட்டம் பயின்ற தன்கர், பரபரப்பான கருத்துக்களை  வெளியிடுவார்.  தமிழக அரசு  கவர்னர் ரவி மீது உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கவர்னர்(1மாதம்), ஜனாதிபதி (3 மாதம்)ஆகியோர் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு  எடுக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் கூறியது.இது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என  ஜனாதிபதி 14 கேள்விகளுடன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு  எதிர்வினையாக, தன்கர், உச்சநீதிமன்றத்தை விட அதிகாரம் மிக்கது நாடாளுமன்றம் என்றார். இதைத்தொடர்ந்து  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,   அரசியல் சாசனமே அதிகாரமிக்கது என்றார்.

இந்த நிலையில்  ஜனாதிபதி  தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே தன்கர் ராஜினாமா அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.

தன்கர் ராஜினாமா குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான   ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் புதிய  தகவலை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ஜெயராம் ரமேஷ்,  தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர். மீண்டும் மாலை 4.30 மணிக்கு கூட்டம் கூடியபோது,  நட்டா, ரிஜிஜூ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்று(செவ்வாய்) பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார்.

நேற்று பிற்பகல் 1 மணி முதல்  மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது.  எனவே  யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக அமைச்சர்களே   கூட்டத்திற்கு வராதது தன்னை அவமதித்ததாக  தன்கர் கருதியிருக்கலாம் அதனால் அவர்  ராஜினாமா செய்திருக்கலாம் என்றும் டெல்லி  வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வழக்கமாக  துணை ஜனாதிபதி   ஓய்வு பெற்று விடைபெறும்போது,  மாநிலங்களவையில் அவருக்கு வழியனுப்பும் விழா நடக்கிறது. இப்போது அதற்கான வாய்ப்பு  இல்லை என்றே கூறப்படுகிறது. இதுவும்  ஏதோ பிரச்னை  இருக்கிறது என்பதை காட்டுகிறது.

error: Content is protected !!